கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய, கே.சி.பி இன்ஜினியர்ஸ்
கோவை நகரில் முன்னணி கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடிகள் சீரமைப்பு , கல்வி உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புயல் வெள்ள நிவாரணம் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏழை எளிய மக்கள் , தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த சூழலில் வேலை வாய்ப்பு, வருவாய் இழப்பினால் பாதிப்பு அதிகமாகி விட்டது. மக்களின் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. மக்களின் வாழ்வாதார சூழலை மேம்படுத்த கே.சி.பி இன்ஜினியர்ஸ் உதவி திட்டங்களில் தீவிரம் காட்டி வருகிறது.
வீடற்ற தினக் கூலி தொழிலாளர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தருதல். உணவு உடை மருத்துவ உதவி செய்தல், பணி வாய்ப்பு குறைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவி செய்தல் , தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பணி உபகரணம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் நோய் பரவியதால் ஏற்பட்ட பாதிப்பிற்காக 51 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர் கே. சந்திர பிரகாஷ் நிவாரண தொகைக்கான காசோலையை தமிழக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சர் எஸ். பி வேலுமணியிடம் வழங்கினார்.
மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் சானிட்டரி ( ஸ்பிரேயர் ) கோவை மாநகராட்சி வசம் வழங்கப்பட்டது.
அனைத்து தொழில் முனைவோர், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர், வணிக வர்த்தக அமைப்பினர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு உதவ முன் வந்தால் ஏழை எளிய மக்களின் பாதிப்பு குறையும் என சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.