கோர்ட்டு உத்தரவுபடி 1 சதவீத ஊக்கத்தொகை
கோர்ட்டு உத்தரவுபடி 1 சதவீத ஊக்கத்தொகை – கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க தலைவர் உதயகுமார் , செயலாளர் சந்திர பிரகாஷ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை.
கோவை, சென்னை, மதுரை , திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி , ஊராட்சிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் கார்ப்பரேஷனில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடக்கிறது. திட்டப் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்படுகிறது.
ரோடு , பாலம், மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் , குடிநீர் குழாய் அமைத்தல் என பல்வேறு பணிகள் உள்ளாட்சியில் நடத்தப்பட்டு வருகிறது. உரிய கால அவகாசத்தில் 10 சதவீத நாட்களுக்கு முன்பாக பணிகளை முடித்து விட்டால் அதாவது 100 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை 90 நாட்களில் முடித்துவிட்டால் ஒரு சதவீத ஊக்கத்தொகையை உள்ளாட்சி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறைகளில் திட்ட காலத்திற்கு 10% நாட்களுக்கு முன்பாக பணி முடிக்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சில அவசர கால பணிகளுக்கு ஊக்கத் தொகை அதிகமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும். 10 சதவீதம் அட்வான்சாக பணிகளை செய்து முடித்தால் ஒரு சதவீத ஊக்கத்தொகை வழங்க கோர்ட்டும் ஆணை பிறப்பித்துள்ளது. ஒப்பந்ததாரர் நல சங்கம் முறையிட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு வெளியானது.
மாநகராட்சியில் திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பது சவாலாக இருக்கிறது. காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து இடையூறு, பணி நடக்கும் இடங்களில் ஏற்படும் தொந்தரவு, திட்டப்பணி நடக்கும்பொழுது வாகனங்கள் சென்று வருவதால் ஏற்படும் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை சமாளித்து பணிகளை நடத்த வேண்டியிருக்கிறது. பணிகள் முடித்த பின்னர் பில் தொகை பெறுவதிலும் காத்திருப்பு நிலை உள்ளது. இடையூறுகள் தொந்தரவுகள் வந்தாலும் சில ஒப்பந்த நிறுவனங்கள் உரிய காலத்திற்கு முன்பாக திட்ட பணிகளை முடித்து மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறது. அது போன்ற நிறுவனங்கள் தகுதி இருந்தும் ஒரு சதவீத ஊக்கத் தொகை பெற முடியாமல் தவிக்கும் நிலை இருக்கிறது. கோவை மாநகராட்சி உட்பட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஊக்கத்தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் ஒப்பந்த நிறுவனங்கள் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.